

திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பரத் நடிப்பில் வெளியான ‘காதல்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் காதல் சுகுமார். இவர், காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பணம், நகையை பெற்று மோசடி செய்ததாக சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சுகுமாருக்கும், துணை நடிகைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அப்பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை சுகுமார் பெற்றதாக தெரிகிறது. சில நாட்கள் கழித்து அப்பெண்ணிடம் பேசுவதை அவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து, கேட்டபோது, தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக சுகுமார் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண், திருமணமானதை மறைத்து தன்னிடம் நகை, பணம் பெற்று மோசடி செய்ததாக சுகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் புகார் அளித்து 3 மாதம் கழித்து, மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் சுகுமாரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.