

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டார். அவரை கடத்திய கும்பலைச் சேர்ந்த இருவர் போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரை பி.பி.குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருமுத்து டி.சுந்தர் (52). பிரபல மில் உரிமையாளரின் மகன். திருமணமாகாத இவர் தனியாக வசிக்கிறார். மதுரை, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களில் இவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகிலுள்ள 6 ஏக்கர் நில விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சுந்தரத்துக்கு சாதகமாக தீர்ப்பானது. இதனிடையே, கடந்த 6-ம் தேதி பி.பி.குளம் வீட்டில் சுந்தரத்துடன் எதிர் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, 10 பேர் கொண்ட கும்பல் சுந்தரத்தை காரில் கடத்தினர்.
இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, திண்டுக்கல் நிலத்துக்கு சுந்தரத்திடம் பவர் பத்திரம் எழுதிப்பெற்ற திண்டுக்கல் மரியராஜ், அவருக்கு உதவியாக இருந்த நாகப்பட்டினம் அருள்செல்வம், ஜனமேந்திரன், முத்துகிருஷ்ணன், விக்னேஷ், தென்காசி அருண் ஆகியோரை கடந்த 15-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, கடத்தல் கும்பல் சுந்தரத்தை நாக்பூரில் பதுக்கி வைத்திருந்ததையறிந்த தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர். இதையறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து மதுரைக்கு காரில் திரும்பியது. அதைக் கண்காணித்த போலீஸார், மதுரை-திருச்சி பைபாஸ் சாலையில் பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் அவர்கள் வந்த காரை மடக்கினர். அப்போது, சிவகங்கை வேலங்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற அழகு(42), மயிலாடுதுறை கிரிவாசன்(46) ஆகியோர் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றபோது எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், கடத்தல் கும்பலிடமிருந்து சுந்தரத்தை போலீஸார் பத்திரமாக மீட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொழிலதிபரை பத்திரமாக மீட்ட காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான தனிப் படையினரை, காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் பாராட்டினார்.