

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த கோட்டூர்புரம் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையின் முடிவில் சந்தேகத்துக்கு இடமான எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே, புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணா பல்லைக்கழகத்துக்கு 15-க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டல் கும்பல் வெளிநாடுகளிலிருந்து இதுபோல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ஒரே கும்பல்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.