ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி: தடய அறிவியல் துறை அதிகாரி கைது

கைது செய்யப்பட்ட செல்வராஜ்
கைது செய்யப்பட்ட செல்வராஜ்
Updated on
1 min read

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக தடய அறிவியல் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அரக்கோணத்தில் அழகப்பா தொலை தூர கல்வி மையத்தை நடத்தி வருபவர் விஜி. இவருக்கும் சென்னை திருநீர்மலையைச் சேர்ந்த செல்வராஜ் (47) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. செல்வராஜ் விழுப்புரம், தடய அறிவியல் துறையில் உதவியாளராக பணி செய்து வந்தார். சென்னையில் உள்ள பிரபலமான ஐஏஎஸ் அகாடமிகளில் பகுதி நேரமாக அவ்வப்போது வகுப்பும் எடுத்து வந்துள்ளார்.அந்த வகையில் விஜி நடத்தி வரும் தொலை தூர கல்வி மையத்தில் படித்து வரும் மாணவர்களுக்கும் வகுப்பு எடுத்துள்ளார்.

அப்போது, அவர் தனக்கு அரசு அதிகாரிகள் பலருடன் நெருக்கம் உள்ளது. நான் நினைத்தால் பல்வேறு அரசு பணிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய விஜி, தனது கல்வி மையத்தில் பயின்று வரும் 26 மாணவர்களுக்கு அரசு பணி பெற்றுக் கொடுக்கும்படி கூறி முன்பணமாக ரூ.75 லட்சம் கொடுத்துள்ளார். இந்த மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை, பத்திரப்பதிவுத்துறை, டிஎன்பிஎஸ்சி மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக செல்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

ஆனால், உறுதி அளித்தபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது காலம் கடத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த விஜி இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராமசாமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டார். இதில், குற்றச்சாட்டுக்கு உள்ளான செல்வராஜ் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.75 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in