

மதுரை: தஞ்சை நடுக்காவேரியில் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரத்தில் தனது சகோதரர், சகோதரியை கைது செய்ததால் போலீஸாரை மிரட்ட விஷம் குடித்ததாக உயர் நீதிமன்றம் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியைச் சேர்ந்த துர்கா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'எனது சகோதரிகள் மேனகா, கீர்த்திகா, சகோதரர் தினேஷ். என் சகோதரர் தினேஷ், தஞ்சை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் சங்க செயலாளராகவும் இருக்கிறார். எங்கள் தெருவில் வசிக்கும் அருண்குமார் போலீஸார் உதவியுடன் டாஸ்மாக் மதுவை சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களுக்கும் விற்று வந்தார். இதை என் சகோதரர் கண்டித்தார்.
இந்நிலையில், ஏப்.8-ல் காவல் ஆய்வாளர் அறிவழகன் மற்றும் போலீஸார் என் வீட்டுக்கு வந்து தினேஷை கடுமையாக தாக்கினர். பின்னர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீஸாரிடம் கேட்டபோது அருண்குமாரின் தாயார் ஆனந்தி என் சகோதரருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர். ஆனந்தி புகாரை திரும்பப் பெறுவதாக கூறியும் அதை ஏற்காமல் எங்களை சாதி பெயரை சொல்லி காவல் ஆய்வாளர் ஷர்மிளா மிரட்டினார்.
எனது சகோதரிக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதால் சகோதரரை விடுவிக்குமாறு கேட்ட என்னையும் சிறையில் அடைத்தனர். இதனால் எனது மற்ற இரு சகோதரிகளும் காவல் ஆய்வாளர் ஷர்மிளாவிடம் எங்களை விடுவிக்குமாறு கெஞ்சினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இரு சகோதரிகளும் விஷம் குடித்தனர். இதில் கீர்த்திகா உயிரிழந்தார், மேனகா தீவிர சிகிச்சையில் உள்ளார்.
எங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதற்கு காவல் ஆய்வாளர் ஷர்மிளாவின் அதிகாரப் போக்கும், அலட்சியப் போக்குமே காரணம். இதனால் நடுகாவேரி காவல் ஆய்வாளர் ஷர்மிளா, சார்பு ஆய்வாளர் அறிவழகன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கலியபெருமாள், தலைமை காவலர் மணிமேகலை ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றவும், எங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சகோதரிகள் இருவரும் போலீஸாரை பயமுறுத்தவே விஷம் குடித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுக்கின்றனர் எனக் கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், இந்த வழக்கை நடுகாவேரி போலீஸார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, விஷம் குடித்து இறந்த பெண்ணின் உடலை பெற்றுக் கொள்வது குறித்து மனுதாரர் தரப்பில் முடிவு செய்ய வேண்டும். தவறினால் போலீஸார் விதிப்படி நடவடிக்கை எடுக்கலாம். மனு குறித்து திருச்சி சரக ஐஜி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.22-க்கு ஒத்திவைத்தார்.