

சென்னை: மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார், சட்டம் ஒழுங்கு போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து சிலர் ஐஸ்அவுஸ் பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற வகை போதைப் பொருளை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீஸார் கடந்த 12-ம் தேதி மதியம் ஐஸ்அவுஸ், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
மேலும் சந்தேகம் அதிகரிக்கவே, அவர்களை சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப் பொருள் வைத்திருந்த வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(27), அதேபகுதி சாஸ்திரி நகரைச் சேர்ந்த சந்தோஷ்(20) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப் பொருளை பல மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.