

மதுரை: மதுரையில் ஆய்வுப் பணிக்கு சென்ற கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதுரையில் நீண்ட நாட்களாக வீட்டுமனைப் பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மதுரையில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்நிலையில் மதுரை ஆணையர் பகுதியில் மதுரை கோட்டாட்சியர் ஷாலினி ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் பூட்டியிருந்த சில வீடுகள் குறித்து அவர் விசாரித்துள்ளார். அப்போது, அங்கு வந்த மதுரை கிழக்கு மாவட்ட பாஜக முன்னாள் துணைத்தலைவர் ஹரிச்சந்திரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவருக்கும் பட்டா வழங்கவேண்டும் என, கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்திய நிலையில், அவர்களுடன் வாக்குவாதம் செய்து மிரட்டியுள்ளர்.
இதுகுறித்து ஆணையர், பகுதி விஏஓ கோதை நாச்சியார், கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பாஜக பிரமுகர் ஹரிச்சந்திரன் மற்றும் ஞானமணி, ரூபேஷ் ஆகியோர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.