

கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த மத போதகர் மூணாறில் இன்று (ஏப்.13) கைது செய்யப்பட்டார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரை அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்(37). இவர், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள, கிறிஸ்துவ ஜெபக் கூடத்தில், மதபோதகராக பணியாற்றி வருகிறார். தவிர, கிறிஸ்துவ பாடல்களையும் இசை நிகழ்ச்சி நடத்தி பாடி வருகிறார். இவர், தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினர்.
அதாவது, கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள, ஒரு வீட்டில் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர், ஒரு விழா நடந்தது. இதில் ஜான் ஜெபராஜ் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவுக்கு வந்திருந்த 17 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுமி ஆகியோருக்கு ஜான்ஜெபராஜ் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதால், அச்சிறுமிகளும் இதுதொடர்பாக வெளியே யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இந்த தகவல் கோவை சைல்டு லைன் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கோவை மாநகர காவல்துறையின், மத்தியப் பகுதி அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிந்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் அவரை தேடி வந்தனர். பெங்களூரு, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீஸார் முகாமிட்டு ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.
இச்சூழலில், மூணாறு பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று கண்காணித்து இன்று (ஏப்.13) அவரைப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோவை, காந்திபுரத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜான் ஜெபராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.