

சென்னை: கோழிக்கோடு போலீஸாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரோசித் ராஜீவன் (31).
இவர் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கோழிக்கோடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவானார். இதையடுத்து, அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த போலீஸார், அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
இதில், ரோசித் ராஜீவன் என்பவரின் ஆவணங்களை சோதனை செய்தபோது, அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு போலீஸாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், கோழிக்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமானத்தில் சென்னை வந்து ரோசித் ராஜீவனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.