

சென்னை: 25 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையின் முடிவில் புரளியை கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தமிழக ரயில் நிலையங்களில் சென்ட்ரல் ரயில் நிலையம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ரயில் நிலைய வளாகத்தில் உள்ள தணிக்கை இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று காலை 11.37 மணியளவில் இ-மெயில் ஒன்று வந்தது. அதில், ``சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்துக்கு 25 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை அனுப்பியுள்ளேன்'' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதில் பார்சல் அனுப்பிய பில் எனக் கூறி 4 இலக்க எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியான இதுகுறித்து யானைக்கவுனி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையம், அதற்குள் அமைந்துள்ள அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர்.
ஆனால், சந்தேகப்படும்படியான எந்த மர்ம பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளியை கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? எங்கிருந்து மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டது என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.