பாலியல் வழக்கில் தேடப்படும் கோவை மதபோதகர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஜான் ஜெபராஜ்
ஜான் ஜெபராஜ்
Updated on
1 min read

சென்னை: பாலியல் வழக்கில் போலீஸாரால் தேடப்படும் கோவை கிறிஸ்துவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கிறிஸ்தவ மத பாடல்கள் மூலமாக சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருப்பவர் கோவையைச் சேர்ந்த கிங் ஜெனரேஷன் கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ். கடந்த 2024-ம் ஆண்டு மே 21ம் தேதி அன்று ஜான் ஜெபராஜ் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின்பேரில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜான் ஜெபராஜ் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நானும் எனது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தூண்டுதலின்பேரில் சிறுமிகளை வைத்து எனக்கு எதிராக போலீஸில் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் முறையாக விசாரிக்காமல் என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையின் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்,” என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in