

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றபோது தொழிலதிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தி என்பவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: கடந்த 2011-ல் சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (56) என்பவருக்கு சொந்தமாக மாம்பாக்கத்தில் இருந்த ஐஸ் கம்பெனியை வாங்கினேன். அப்போதே, சொத்து ஆவணத்தை அவர் என்னிடம் கொடுத்து விட்டார். கம்பெனியை நடத்த முடியாததால், 2018-ல் அதை வேறொருவருக்கு விற்க முடிவு செய்தேன்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட சொத்து ஆவணத்தை காணவில்லை என்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த கார்த்திகேயன், போலீஸாரை ஏமாற்றி ‘ஆவணம் காணவில்லை’ என்ற சான்றையும் பெற்றார். அதை பயன்படுத்தி, சொத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றிக் கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுதொடர்பாக தாழம்பூர் போலீஸார் விசாரித்து வந்தனர். 2024-ல் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தாழம்பூர் போலீஸார் பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அபிராமபுரத்தில் உள்ள கார்த்திகேயனின் வீட்டுக்கு தாழம்பூர் போலீஸார் நேற்று காலை 5 மணி அளவில் வந்துள்ளனர். சம்மன் கொடுத்து கார்த்திகேயனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயனை போலீஸார் பிடித்து இழுத்தபோது திடீரென கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அவரை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்து, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்ததால்தான் அவர் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சந்தேக மரணம் என்ற பிரிவில் அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸார் தாக்கியதால்தான் மரணம் ஏற்பட்டதாக அவரது மகன், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
‘‘கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.