

சென்னை: ரூ.8 ஆயிரத்துக்காக மீனவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்தவர் முருகன் (54). மீன்பிடி வேலை செய்து வந்தார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி காசிமேடு, பழைய வார்ப் பகுதியில் உள்ள சாக்லேட் நிறுவனம் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
தகவல் அறிந்து மீன்பிடி துறைமுகம் போலீஸார் வந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது வீடு அருகே வசிக்கும் ரஞ்சித் (35) என்பவர், முருகனிடம் ரூ.8 ஆயிரம் கொடுத்து, ஆந்திராவில் இருந்து போதைப் பொருள் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்ட முருகன், போதைப் பொருள் வாங்கி தராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ரஞ்சித் கையால் தாக்கி கீழே தள்ளியதில் முருகன் உயிரிழந்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஞ்சித்தை கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.