

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மகன் கைது செய்யப்பட்டதால், தூத்துக்குடி மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள், 350 கிராம் கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சிறு பொட்டலங்களாக தயார் செய்து, விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, தூத்துக்குடி நயினார்விளையைச் சேர்ந்த ஜெர்சன் (20), முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (25), அண்ணாநகர் 11-வது தெருவைச் சேர்ந்த சத்தியசீலன் (22), முள்ளக்காடு சந்தோஷ் நகரைச் சேர்ந்த ஹரிபிரபாகர் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஜெர்சன் என்பவர், தூத்துக்குடி மாநகராட்சி 26-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் மரியகீதாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது ஏற்கெனவே 6 வழக்குகளும், சத்தியசீலன் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கவுன்சிலர் மரியகீதா நேற்று முன்தினம் இரவு வடபாகம் காவல் நிலையத்துக்குச் சென்று, தனது மகனை விடுவிக்க கோரி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் வசந்தகுமார், தூத்துக்குடி நகர ஏஎஸ்பி மதனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், "தூத்துக்குடி வடபாகம் போலீஸார், கஞ்சா வழக்கில் கவுன்சிலர் மரியகீதாவின் மகனை கைது செய்துள்ளனர். இதனால், கவுன்சிலர் தனது ஆதரவாளர்களுடன் வடபாகம் காவல் நிலையத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டு, பொது சொத்துகளை சேதப்படுத்தியுள்ளார். கவுன்சிலர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.