

சென்னை: ஆட்டோ கண்ணாடி இடித்ததால் ஏற்பட்ட சண்டையை விலக்கி விட வந்த முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ஓட்டேரி, எஸ்.எஸ்.புரம், 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்ராஜ்(41). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி புரசைவாக்கம், பிரிக்ளின் சாலை வழியாக ஆட்டோ ஓட்டி சென்றார். அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீது ஆட்டோவின் கண்ணாடி தவறுதலாக இடித்துவிட்டது. உடனே செந்தில்ராஜ் ஆட்டோவை நிறுத்தி, இடிபட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, ஆட்டோவை எடுக்க முயன்றார்.
வீண் தகராறு: அப்போது, அங்கிருந்த ஓட்டேரியைச் சேர்ந்த காஞ்சனா என்ற பெண், செந்தில்ராஜிடம் வீண் தகராறு செய்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த காஞ்சனாவின் மகன் சூரியகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, செந்தில்ராஜிடம் தகராறு செய்து தாக்கினர்.
செய்வதறியாது தவித்த செந்தில்ராஜ், தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். உடனே அவரது மனைவி, அவரது தம்பி சரத்குமார் மற்றும் சித்தப்பா பாலு (57) ஆகியோர் வந்து சண்டையை விலக்க முயற்சி செய்தபோது, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
கீழே விழுந்து உயிரிழப்பு: இதில் காஞ்சனா தரப்பினர் சேர்ந்து, செந்தில்ராஜ் மற்றும் அவரது மனைவியை கைகளால் தாக்கினர். செந்தில்ராஜின் சித்தப்பா பாலுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கீழே தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக கொலைக் குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் சட்டப்பிரிவு, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
மேலும், முதியவரை தாக்கி உயிரிழப்புக்கு காரணமானதாக புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பாலசந்தர் என்ற சந்துரு (25), ஓட்டேரியைச் சேர்ந்த காஞ்சனா (44), அவரது மகன் சூரியகுமார் என்ற ரிஷன் (25), ஏழுகிணறு சதீஷ்குமார் என்ற சதீஷ் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.