

திருநெல்வேலி: காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்தது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநெல்வேலி டவுனில் இருந்து ராமையன்பட்டி செல்லும் சாலையில் குருநாதன்கோவில் விலக்கு அருகே நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது. தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் 3 பேர் போதையில் சண்டையிட்டது தெரியவந்தது.
இதற்கிடையில், காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், குருநாதன்கோவில் விலக்கு அருகேயுள்ள சுடுகாட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, காவல் துணை ஆணையர்கள் கீதா, வினோத் சாந்தாராம் மற்றும் போலீஸார் அங்கு சென்று, தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தவர் நெல்லை டவுன் ஜெபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை சிவா (21) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில், உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். போலீஸார் அந்த இடத்தை தோண்டி உடலைக் கைப்பற்றினர்.
தொடர் விசாரணையில், ஜெபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்(20) என்பவர், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, சுடலை சிவா மற்றும் 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கைதான சிறுவர்களில் ஒருவரது தங்கையை ஆறுமுகம் காதலித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆறுமுகத்தை டாஸ்மாக் கடைக்கு வரவழைத்து 5 பேரும் மது அருந்தியுள்ளனர். அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆறுமுகத்தை கொலை செய்து, சுடுகாட்டில் புதைத்தது தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.