

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று முன்தினம் காலை மாணவர்கள், ஆசிரியர்கள் வந்தனர். அப்போது, வகுப்பறை ஒன்றில் ஆண், பெண் என 2 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவர்களை எழுப்பியபோது, அந்த இளைஞர் மது போதையில் இருப்பது தெரியவந்தது.
அவர்களை ஆசிரியர்கள் கண்டித்தபோது, அந்த இளைஞர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வகுப்பறையில் இருந்த கீழவாளாடி கீழத் தெருவைச் சேர்ந்த நவீன்குமாரை (28) கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.