

சென்னை: மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர், வீட்டிலிருந்து பணிக்கு தினந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும்போது, கடந்த ஒரு வார காலமாக இளைஞர் ஒருவர், அப்பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால், வேதனை அந்த அந்த பெண் இது தொடர்பாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தனிப்படை போலீஸார் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், சம்பந்தப்பட்ட இளம் பெண்ணிடம் அத்து மீறலில் ஈடுபட்டது திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கார் மெக்கானிக்: விசாரணையில் கைது செய்யபட்ட கார்த்திக், அண்ணா சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும், தினமும் வேலைக்கு மெட்ரோ ரயிலில் செல்லும்போது, சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை பின் தொடர்ந்து ரயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கார்திக் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.