

சென்னை: கல்லால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டேரி, கொசப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவைச் சேர்ந்தவர் கோபி (35). சாமி சிலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 4-ம் தேதி இரவு வீட்டினருகே ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு செல்ல டோபிகானா வீட்டு வசதி வாரியம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த 4 பேர் கோபியை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே 4 பேரும் கை மற்றும் கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கி கோபியிடமிருந்த பணம், செல்போனை பறித்து தப்பினர். அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து கல்லால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பு எடிசன் (23), அதே பகுதி எபிநேசர் (18), கொசப்பேட்டை சதீஷ் (18) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் கைதான எடிசன் பிரபல கொள்ளையன் என்றும் அவர் மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி உட்பட 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.