

விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து சீட்டு பணம் வசூல் செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் கோகுலம் நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனின், ஸ்ரீ கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் கோ பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன்படி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிறுவனம் மற்றும் நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலனின் வீடு, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கொச்சியில் இருந்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.50 கோடி பணத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளை மீறி கோகுலம் நிதி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே பலரிடம் சீட்டு பணம் வசூலிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் சென்னை மற்றும் கோழிக்கோட்டில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில், கோகுலம் நிதி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி ரொக்கமாக ரூ.371.80 கோடியும், காசோலையாக ரூ.220.74 கோடியும் சீட்டு பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சோதனையில் கணக்கில்வராத ரூ.1.50 கோடி பணமும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.