சென்னை | ஆட்சியரின் கையெழுத்திட்டு ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் துறை அதிகாரிகள் உட்பட 3 பேர் கைது

கைதான ஆர்.ஐ-க்கள் பிரமோத், சுப்​பிரமணி, ஓட்​டுநர் தினேஷ்
கைதான ஆர்.ஐ-க்கள் பிரமோத், சுப்​பிரமணி, ஓட்​டுநர் தினேஷ்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து அபகரித்ததாக இரு வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின்போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் என்ஆர்ஐ வங்கிக் கணக்கு செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஆட்சியரின் என்ஆர்ஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், என்ஆர்ஐ உதவித் தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை வழங்கி, அந்த முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியரக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், திருவள்ளூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் தினேஷ் என்பவரை என்ஆர்ஐ உதவித் தொகை பெரும் பயனாளி போன்று நடிக்க வைத்து, போலி ஆவணங்கள் வழங்கி, அவர் மூலம் பணம் மோசடி செய்திருந்தது தெரிந்தது.

சென்னை ஆட்சியரகத்தில் என்ஆர்ஐ பிரிவில் பணியாற்றி தற்போது மாம்பலம் வருவாய் ஆய்வாளராக உள்ள சுப்பிரமணி(31), சென்னை ஆட்சியரகத்தில் வருவாய் அலுவலராகப் பணியாற்றும் பிரமோத் (30) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வருவாய் ஆய்வாளர்கள் இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்புதான் பணியில் சேர்ந்திருப்பதும், ஆட்சியரின் கையெழுத்தை போலியாகப் போட்டு மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீஸார், இருவர் வீடுகளிலும் சோதனை செய்தனர். இதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், ரூ.85 ஆயிரம் ரொக்கம், ஆட்சியர் பெயரில் இருந்த போலி முத்திரை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in