

பெங்களூரு: பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியின் தந்தையை ஹனி டிராப்பில் சிக்க வைத்து ரூ. 4 லட்சம் மிரட்டி பறித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ''பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே-அவுட்டை சேர்ந்தவர் சதீஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 42 வயதான இவர், குஜராத்தில் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது மகள் படிக்கும் தனியார் பள்ளியின் ஆசிரியை ஸ்ரீதேவி ருதகி (25) தன்னை ஹனி டிராப்பில் சிக்க வைத்து, ரூ. 4 லட்சம் பறித்துள்ளார். மேலும் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப் போவதாகக்கூறி மிரட்டுகிறார். இதற்காக ரூ.20 லட்சம் கேட்டு ரவுடிகள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறினார்.
இதையடுத்து அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினோம். அதில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் ஆசிரியை ஸ்ரீதேவி, அவரது 5 வயது மகளை பள்ளியில் சேர்க்கும்போது சதீஷ்குமாருக்கு அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் செல்போனில் அவரை தொடர்பு கொண்ட ஸ்ரீதேவி ஆசை வார்த்தைகளை பேசி, அவரை தன் வலையில் சிக்க வைத்துள்ளார்.
பின்னர் சதீஷ்குமாரின் வீட்டுக்கு சென்று, ரூ.50 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அவரிடம் பணம் இருப்பதை அறிந்த அவர், தொடர்ந்து பணம் பெற்று வந்திருக்கிறார். அந்த வகையில் ரூ.4 லட்சம் பணம் பறித்துள்ளார். இதன்பின்னர் பணம் தர மறுத்ததால், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை ஸ்ரீதேவிக்கு ஆதரவாக அந்த பள்ளியின் தாளாளர் அபினவ் சாகர் (28) செயல்பட்டுள்ளார். இவர் சதீஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஸ்ரீதேவியுடன் நெருக்கமாக இருந்ததற்காக ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். அப்போது பணம் தர மறுத்ததால் பிரபல ரவுடி கணேஷ் காளே(38) என்பவர், சதீஷ்குமாரை தொடர்புக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரின் செல்போன் அழைப்பு ஆகியவற்றை ஆராய்ந்ததில் மூவரும் கூட்டாக செயல்பட்டது தெரியவந்தது. ஆசிரியை ஸ்ரீதேவியுடன் சதீஷ்குமாருக்கு உள்ள பாலியல் தொடர்பை வைத்து பணம் பறிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவி ருதகி, அபினவ் சாகர், கணேஷ் காளே ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்'' என தெரிவித்தனர்.
இதையடுத்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 பேரையும் பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.