

சென்னை: கேளம்பாக்கம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமம், பாலமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (34). சிறுசேரி சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் திருப்போரூரை அடுத்துள்ள காயார் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மனைவி சுகந்தி (33), மகன்கள் லியோ டேனியல் (10), ஜோ டேனியல் (5) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து குடும்பத்தினருடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு இரவு 11 மணி அளவில் காயார் கிராமத்தில் இருந்து தையூர் கிராமத்திற்கு அதே மோட்டார் சைக்கிளில் 4 பேரும் சென்றுள்ளனர். தையூரை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் போது காயார் காலனி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே எதிரே வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நால்வரில் ஹரிதாஸ் மற்றும் அவரது மகன் லியோ டேனியல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து மற்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே ஹரிதாசின் மனைவி சுகந்தி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. பலத்த காயமடைந்த ஹரிதாசின் இளைய மகன் ஜோ டேனியலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை ஓட்டி வந்தவர் காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் (43) என்பதும், காரில் மனைவி பிந்து (35), மகன் அபினேஷ் பால்மோனி (6) ஆகியோர் இருந்தனர் என்பதும், இவர் கேளம்பாக்கத்தில் செருப்பு கடை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
கடை வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அஸ்வின் குமார், அவரது மனைவி, மகனுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் மூவரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இவ்விபத்து குறித்து காயார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு இடங்களில் விபத்தில் இருவர் பலி: பெருங்களத்தூர் பகுதியைச் சார்ந்தவர் உமாபதி (44) கோவளம் செல்வதற்காக கேளம்பாக்கத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் பேருந்து ஏற பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றார். அப்பொழுது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் சாந்தா நகரைச் சார்ந்தவர் பாலாஜி (46) நேற்று இரவு மாம்பாக்கம் செல்ல கோவிலாஞ்சேரி வழியாக சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.