

சண்டிகர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரியானாவை சேர்ந்த கிறிஸ்தவ மதத் தலைவர் பஜிந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஹரியானாவின் யமுனாநகரை சேர்ந்தவர் பஜிந்தர் சிங். இந்து மதம், ஜாட் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். கொலை வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன்பிறகு கடந்த 2016-ம் ஆண்டில் பஞ்சாபின் தேஜ்பூரில் 'சர்ச் ஆப் குளோரி அண்ட் விஸ்டம்' என்ற பெயரில் புதிதாக கிறிஸ்தவ சபையை உருவாக்கினார். இந்த சபையின் சார்பில் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது 32 தேவாலயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலும் தேவாலயங்கள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் பஞ்சாப் மாநிலம், மொகாலியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு, பஜிந்தர் சிங் உடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பஜிந்தர் ஆசை காட்டினார். பலமுறை அந்த பெண்ணை, பஜிந்தர் சிங் பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2018-ம் ஆண்டில் மொகாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பஜிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையான அவர் தொடர்ந்து கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில் பஜிந்தர் சிங் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது கிறிஸ்தவ சபையை சேர்ந்த 5 போதகர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு போதகர் உயிரிழந்துவிட்டார்.
மொகாலி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விக்ரந்த் குமார் கடந்த 28-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அப்போது பஜிந்தர் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதர 4 போதகர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதி விக்ரந்த் குமார் நேற்று தண்டனை விவரத்தை அறிவித்தார். அப்போது குற்றவாளி பஜிந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறியதாவது: உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பஜிந்தர் சிங்குக்கு ஏராளமான நன்கொடைகள் வருகின்றன. கிறிஸ்தவ மதத்தை பயன்படுத்தி அவர் கோடீஸ்வரராக வாழ்கிறார். எனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார்.
வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நாங்கள் சமர்ப்பித்தோம். ஆரம்பத்தில் பஜிந்தர் சிங் பல்வேறு வகைகளில் எங்களை மிரட்டினார். ஆனால் வழக்கு தீவிரம் அடைந்தபோது ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசினார். நாங்கள் எதற்கும் விலைபோகவில்லை.
தற்போது பஜிந்தர் சிங்குக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் வழக்கில் தொடர்புடைய 4 போதகர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.