

சென்னை: நகைக்கடை அதிபரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பெற்று மோசடி செய்ததாக நகை விற்கும் முகவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது சகோதரரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னை, வேப்பேரியில் வசிப்பவர் லஷ்மண்குமார் (44). சவுகார்பேட்டையில் சிவம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். தங்க நகை மொத்த வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது நகைக் கடையில் கமிஷன் ஏஜென்டாக தர்மேஷ் ஜெயின் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி லஷ்மண்குமார் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 177 பவுன் நகைகளை தர்மேஷ் ஜெயினிடம் கொடுத்து வாடிக்கையாளர் குல்திப்ராவல் என்பவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
தங்க நகைகளை பெற்றுக்கொண்ட தர்மேஷ் ஜெயின் அந்த நகைகளை வீட்டில் வைத்துள்ளார். இந்த நகைகளை அவரது அண்ணனாக சவுகார்பேட்டையில் வசிக்கும் அல்பேஷ்குமார் ஜெயின் (46) என்பவர் எடுத்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை விற்கும் ஏஜென்டாக வேலை செய்து வந்த அவர், எடுத்துச் சென்ற நகைகளை திரும்பக் கொடுக்கவில்லை. அதற்கான பணத்தையும் கொடுக்கவில்லை.
அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் லஷ்மண்குமார் இது தொடர்பாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
சகோதரர்கள்: இதில், சகோதரர்களான தர்மேஷ் ஜெயின் மற்றும் அல்பேஷ்குமார் ஜெயின் ஆகியோர் லஷ்மண்குமாரின் தங்க நகைகளை திட்டமிட்டே ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, இவர்களை கைது செய்ய போலீஸார் முடிவு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தலைமறைவாக இருந்த அல்பேஷ் குமார் ஜெயின் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரர் தர்மேஷ் ஜெயினை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.