

சென்னை: பெருங்குடியில் ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வேளச்சேரி பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம்(26). இவர், பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற அப்பு(24) உள்பட மேலும் சிலருடன் நண்பராக பழகி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜீவரத்தினம் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, நண்பரான ரஞ்சித்குமாரின் மனைவி ஜீவரத்தினத்தை அடிக்கடி சிறைக்கு சென்று சந்தித்து வந்துள்ளார். சிறையிலிருந்து வந்த பிறகு இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி, கல்லுக்குட்டை இந்திரா தெரு பகுதியில், ஜீவரத்தினம், ரஞ்சித்குமார் மற்றும் சிலரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது தனது மனைவியுடனான நட்பு குறித்து ஜீவரத்தினத்திடம் ரஞ்சித்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஜீவரத்தினத்தை கல் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.
அக்கம் பக்கத்தினர் ஜீவரத்தினத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஜீவரத்தினம் உயிரிழந்தார். இதுதொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து ரஞ்சித் குமார், பெருங்குடி கல்லுக்குட்டை கோகுல் (25), ரமேஷ் (28), புவனேஷ்வர் என்ற அஜய் (19), ஜெகதீஷ் என்ற ஜெயீஸ் (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். ரஞ்சித்குமார் மீது 8 வழக்குகளும், ரமேஷ் மீது 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.