

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை பதுக்கி விற்பனை செய்ததாக தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 187 காற்றாடிகள், 72 மாஞ்சா நூல்கண்டுகள் மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்க விடப்பட்டதால் சென்னையில் முன்பு உயிரிழப்பு மற்றும் உடல் உறுப்பு துண்டிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாஞ்சா நூல் பயன்படுத்தி விடப்படும் பட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், மாஞ்சா நூல் பட்டம் விடுவது, அதை விற்பனை செய்வது, பதுக்குவது குற்றம் என அறிவிக்கப்பட்டது. மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தொடர் கண்காணிப்பிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் திருவொற்றியூர், காலடிப்பேட்டை, வ.உ.சி. 1வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அங்கு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் தடை செய்யப்பட்ட காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த அருண்குமார் (40) என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து 72 மாஞ்சா நூல்கண்டுகள், 187 காற்றாடிகள் மற்றும் மாஞ்சா தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட அருண்குமார் மண்ணடி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருவதும், ஆன்லைனில் வெளிமாநிலத்திலிருந்து காற்றாடிகளை வாங்கி, வீட்டிலேயே மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.