

சென்னை: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (56). இவர், கடந்த 8-ம் தேதி புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை, நாராயண நாயக்கன் தெரு சந்திப்பில் உள்ள ஒரு கடையின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த செல்வம், இதுதொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் செல்வத்தின் இருசக்கர வாகனத்தை திருடியது ராணிப்பேட்டையை சேர்ந்த இம்ரான் (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இம்ரானை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. மேலும், இம்ரான் மீது ஏற்கெனவே கிண்டி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.