

சென்னை: புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, நேற்று இரவு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘‘நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்’’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக மிரட்டல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வேப்பேரி காவல் நிலைய போலீஸார், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல் ஆணையர் அலுவலகத்தின் 8 மாடிகளிலும் சோதனை நடத்தினர். முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.
எனவே, புரளி கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து மிரட்டல் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் வேப்பேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.