

சென்னை: நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேடு, திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் டிபன் கடை நடத்தி வருபவர் பாண்டியன் (64). இவர் கடையிலிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் கத்தி முனையில் மாமூல் கேட்டார். கொடுக்க மறுத்ததால் பாண்டியனை தாக்கி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பினார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கத்தி முனையில் மாமூல் கேட்டது சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கார்த்திக்கேயன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். சூளைமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கார்த்திகேயன் மீது 1 கொலை, 4 கொலை முயற்சி, வழிப்பறி உட்பட சுமார் 9 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை சூளைமேடு தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்திக்கேயன் 3 குற்ற வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்து வந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.