

மதுரையில் தனியார் பள்ளி மாணவிக்கு சீருடை தைக்க அளவு எடுத்தபோது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 2 டெய்லர்கள் மற்றும் ஓர் ஆசிரியை ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகேயுள்ள எம்கே.புரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான சீருடைகளை தைக்கும் பணியில் ஆண் டெய்லரை ஈடுபடுத்தி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு சீருடை தைக்க அளவெடுத்த ஆண் டெய்லர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதற்கு பெண் டெய்லர் உடந்தையாக இருந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. அந்த டெய்லரிடமே அளவெடுக்க வேண்டும் என்று ஆசிரியை ஒருவர் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட மாணவி பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த டெய்லர் பாரதி மோகன் (62), எல்லீ்ஸ் நகரைச் சேர்ந்த டெய்லர் கலாதேவி (60), பள்ளி ஆசிரியை சாரா (32) ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: மாணவிகளுக்கான சீருடைக்கு அளவு எடுக்க ஆண் டெய்லரை ஈடுபடுத்தக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கத்தினர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி, மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜ துரை, மாவட்ட நிர்வாகிகள் டீலன், ரேகன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, விமலா, பாத்திமா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.