

சென்னை: இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தொட்டில் கயிறு இறுக்கி இறந்ததாக நாடகமாடிய தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மண்ணடி, லிங்குச் செட்டி தெருவைச் சேர்ந்தவர் அக்ரம் ஜாவித் (33). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிலோபர். இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளான நிலையில் இரண்டரை வயதில் பாஹிமா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிலோபரும், அவரது குடும்பத்தினரும் இஃப்தார் நோன்பு திறப்பதற்காக அருகே உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர். அப்போது ஜாவித் மட்டும் தனது குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். நிலோபர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, குழந்தை பாஹிமா தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கிடப்பதாக ஜாவித் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, குழந்தையை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாஹிமா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கி இறுக்கியதால் மகள் இறந்து விட்டதாக ஜாவித் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (மார்ச் 26) வந்தது. அதில் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும், இதற்கான தடயங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் ஜாவித்தை பிடித்து தனி இடத்தில் வைத்து போலீஸ் பாணியில் விசாரித்தனர்.
இதில், ஜாவித்தான் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும், மனைவி நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டதினால் ஜாவித் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பதும், பின்னர் கொலையை மறைப்பதற்காக குழந்தை தொட்டில் கயிறு இறுக்கி இறந்துவிட்டதாக நாடகமாடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜாவித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.