

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரவில் விடுதிக்குச்சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் மர்மநபர் அத்துமீறிய சம்பவத்தைக் கண்டித்து பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை பின்புறமாக மருத்துவர்கள், மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையில் பணி முடிந்து விடுதிக்கு, பெண் பயிற்சி மருத்துவர் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மர்மநபர், பயிற்சி பெண் மருத்துவர் முகத்தை துணியால் மூடி தாக்க முயன்றார். இதையடுத்து அவர் கூச்சலிட்டார்.
அந்தச்சமயத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பணியாளர் ஒருவரின் கணவர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் மர்ம நபர் தப்பி ஓடினார். அங்கு தெருவிளக்குகள் இல்லாததால் தப்பியோடியவரை அடையாளம் காண முடியவில்லை.
இச்சம்பவத்தை கண்டித்தும், பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும் நேற்று காலை பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், மருத்துவமனை உள்பகுதி வழியாக விடுதிக்குச் செல்லும் பாதை இரவு நேரங்களில் மூடப்படுகிறது. அதைத் திறந்துவிட வேண்டும். மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான சிசிடிவி கேமராக்களை சீரமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென கல்லூரி டீன் சத்தியபாமாவிடம் கோரிக்கை வைத்தனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கலைக்கதிரவன், பிரான்சிஸ், டிஎஸ்பி அமலஅட்வின் மற்றும் சிவகங்கை நகர் போலீஸார் ஆகியோர் பயிற்சி மருத்துவர்களை சமரசப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குச் சென்றனர்.
புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விடுதியில் தங்கியுள்ளோர், மருத்துவமனை அருகே தங்கி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மின்விளக்குகள் எரியாதது, சிசிவிடி கேமராக்கள் இயங்காமல் இருந்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கல்லூரி டீன் சத்தியபாமா கூறுகையில், ‘இரவில் பணி முடித்து விடுதிக்குச் சென்றபோது தன்னை மர்மநபர் தாக்கியதாகப் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம். அவர்கள் விசாரித்து வருகின்றனர். பெண் மருத்துவருக்கு காயம் ஏற்படவில்லை. நலமுடன் உள்ளார்.’ என்றார்.