

கோவை அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சீனியர் மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர்கள் 13 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட ஜூனியர் மாணவர்கள் இணைந்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. முதலாமாண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறையில் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை மண்டியிட வைத்தும், அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து, சீனியர் மாணவரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய ஜூனியர் மாணவர்கள் 13 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைநீக்கம் செய்த மாணவர்கள் பெற்றோருடன் வந்து இன்று (மார்ச் 24) கல்லூரி முதல்வர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.