

ராமாபுரத்தில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராமாபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் ராமாபுரம், தாங்கல் தெருவில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. அவர், அன்னை சத்யா நகரை சேர்ந்த வினோத் (எ) ஆதி (22) என்பதும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 250 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்தனர்.