

பாட்னா: பிஹாரில் உள்ள தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய நபர் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம், ஆரா நகரில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 10-ம் தேதி முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.10 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அராரியா மாவட்டத்தில் மேலும் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட அந்த கும்பல் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினரும் (எஸ்டிஎப்) மாவட்ட போலீஸாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தல்ஹா கால்வாய் பகுதியில் இருந்த அவர்களை எஸ்டிஎப் வீரர்கள் நேற்று சுற்றி வளைத்தனர்.
அப்போது, கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பதிலுக்கு எஸ்டிஎப் வீரர்களும் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். தப்பியோடியவர்களை எஸ்டிஎப் படையினர் தேடி வருகின்றனர்.