

சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரவாயல் போலீஸார் வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே கண்காணித்தனர்.
அப்போது, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை வைத்திருந்த புழல் கிஷோர்குமார் (23), அதே பகுதி மணிகண்டன் என்ற மணி (36) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி வானகரத்தைச் சேர்ந்த பாசில் உல்லா (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்ற மணி கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருவதும், பாசில் உல்லா தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.