

திருத்தணி: திருத்தணி அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆர்.எஸ். மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்சன் மனைவி மெர்சி (35). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். மெர்சி ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.பணி நிமித்தமாக திருநின்றவூர் பகுதியில் வசித்து வந்த மெர்சி, ஆர்.எஸ்.மாங்காபுரத்தில் வசிக்கும் தன் பெற்றோர் வீட்டில் தன் குழந்தைகளை விட ஆர்.எஸ். மங்காபுரம் சென்றார்.
அங்கு குழந்தைகளை விட்டுவிட்டு மெர்சி, பணிக்காக இன்று (மார்ச் 20) காலை தன் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, மெர்சி, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே முருக்கம்பட்டு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. இதில், தலையில் படுகாயமடைந்த மெர்சி, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மெர்சி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.