

கேளம்பாக்கம்: படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் பேராசிரியராக வேலை பார்த்து வருபவர் சஞ்சீவ்ராஜ் (35). இவர் தன்னுடன் பணியாற்றும் 27 வயது பேராசிரியையிடம் பழகி வந்துள்ளார். தொடக்கத்தில் நண்பரைப் போல் பழகி வந்த அவர் பின்னர் திடீரென இரட்டை அர்த்த வசனங்களுடன் பேசத் தொடங்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை சஞ்சீவ் ராஜ் உடன் நட்பை முறித்துக் கொண்டு திட்டி அனுப்பி உள்ளார். பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த சஞ்சீவ் ராஜ் சில நாட்கள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் தன் வேலையை காட்டி உள்ளார். அப்போது அந்த நபரின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட பேராசிரியை கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்த சக பேராசிரியர்கள் ஓடி வந்து சஞ்சீவ்ராஜை தாக்கியுள்ளனர்.
கேளம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய விசாரணையில் சஞ்சீவ் ராஜ் தன்னுடன் பணியாற்றும் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து போலீஸார் சஞ்சீவ்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.