

சென்னை: மீன் கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையில் பெண் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எம்கேபி நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாரதி - திவ்யா இடையே மீன் கடை வைப்பது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.
இந்த பிரச்சினையில், திவ்யாவின் சகோதரர் தினேஷ், அவரது நண்பர் ஜெகன் ஆகியோர் பாரதியின் காலில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரில் தினேஷ், ஜெகன் மீது எம்கேபி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கடந்த 2019 செப். 22-ம் தேதி சத்தியமூர்த்திநகர் பகுதியில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்திருந்த ஜெகனை, பிரகாஷ் (23), அருண் (24), மேகநாதன் (32), பிரவீன்ராஜ் (24), அஜித் (20), நவீன்குமார் (26) ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வெட்டி கொலை செய்தனர். 6 பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எல். ஆபிரகாம் லிங்கன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார். விசாரணை காலத்தில் மேகநாதன், நவீன்குமார் உயிரிழந்துவிட்டதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இந்நிலையில், போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பிரகாஷ், அருண், பிரவீன்ராஜ், அஜித், பாரதி ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.