பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுற்றுலா வழிகாட்டி கைது
திருவண்ணாமலை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது பெண் ஆன்மிகப் பயணமாக திருவண்ணாமலைக்கு கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார். தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவர், தியானப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அவரிடம், 2,668 அடி உயர் அண்ணாமலை மீது ஏறி தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என்று சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசன் என்பவர் கூறியுள்ளார். அதை நம்பிய பிரான்ஸ் பெண், சில நாட்களுக்கு முன் வெங்கடேசனுடன் மலை ஏறிச் சென்றுள்ளார். அங்கு அவரை வெங்கடேசன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், திருவண்ணாமலையில் இருந்து வெளியேறிய அந்த பெண், சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டு துணை தூதரகத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகாரை அனுப்பி உள்ளனர்.
அதன்பேரில், அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருவண்ணாமலை பேகோபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.
