ஈரோடு அருகே கார் விபத்தை ஏற்படுத்தி சேலத்தை சேர்ந்த ரவுடி படுகொலை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்
ஈரோடு: ஈரோடு அருகே கார் விபத்தை ஏற்படுத்தி சேலத்தைச் சேர்ந்த ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில், காயம் அடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஜான் மீது சேலம் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ஜான் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் வசித்து வந்தார். மேலும், அங்கு நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வழக்கு ஒன்றுக்காக சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட ஜான் தனது மனைவியுடன் நேற்று வந்தார். பின்னர் இருவரும் காரில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
ஈரோடு நசியனூர் பகுதியில் கார் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு கார் ஜான் காரின் மீது மோதியது. இதனிடையில் விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மர்ம நபர்கள் ஜானை அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற சரண்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில், ஜான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த சரண்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீஸார், ஜானின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்தது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் மீது தாக்குதல்: இந்நிலையில், இதில் தொடர்புடைய கார்த்திகேயன் என்பவர், நசியனூர் அருகே போலீஸாரிடம் பிடிபட்டார். அவர் அளித்த தகவலின்பேரில், பவானி பச்சப்பாளியில் பதுங்கியிருந்த 3 பேரை பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் தலைமையிலான போலீஸார் பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் போலீஸாரைத் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனர். இதையடுத்து, போலீஸார் மூவரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ், சரவணன், பூபாலன் என்பது தெரியவந்தது. காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் ரவி, முதல்நிலைக் காவலர் லோகநாதன் ஆகியோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை கோவை சரக டிஐஜி சசிமோகன் மற்றும் அதிகாரிகள் சந்தித்து, நலம் விசாரித்தனர்.
