நாமக்கல்லில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - காவல் துறை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு 

இடது: தற்கொலை செய்து கொண்ட இளைஞர் | வலது: வேலகவுண்டம்பட்டி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.
இடது: தற்கொலை செய்து கொண்ட இளைஞர் | வலது: வேலகவுண்டம்பட்டி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.
Updated on
1 min read

நாமக்கல்: இளைஞரின் தற்கொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையம் முன் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி தட்டாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்ற மணிகண்டன் அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மணிகண்டன் இறப்புக்கு வேலகவுண்டம்பட்டி காவல் துறையினர்தான் காரணம் என அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் புகார் எழுப்பினர்.

தொடர்ந்து இன்று காலை நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள வேலகவுண்டம்பட்டி காவல் நிலையம் முன் மணிகண்டன் உடலுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ‘நேற்று இரவு பணி முடித்து மணிகண்டன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வேலகவுண்டம்பட்டி காவல் நிலையம் வழியாக வந்தபோது மணிகண்டனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி மது அருந்தி வந்ததாக கூறி வழக்கு பதிவு செய்ததுடன் அவரை தாக்கியுள்ளனர். இதில் மணிகண்டன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். எனவே மணிகண்டன் இறப்புக்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மறியல் போராட்டம் தொடரும்’ என்றனர்.

அவர்களை காவல் துறையினர் சமரசம் செய்தனர். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து மணிகண்டன் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சாலை மறியல் சம்பவத்தால் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் 2 மணி நேரம் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் வாகனப் போக்குவரத்தை சீரமைத்தனர்.

எஸ்.ஐ. சஸ்பெண்ட்: இதனிடையே, மணிகண்டன் தற்கொலை சம்பவம் தொடர்பாக வேலகவுண்டம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in