சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை: சித்தோடு போலீஸார் விசாரணை

சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை: சித்தோடு போலீஸார் விசாரணை
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு நசியனூர் வழியாக திருப்பூர் நோக்கி காரில் சென்ற சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா (35). இவருக்கு சரண்யா என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். ஜான் மீது சேலம் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இச்சூழலில் ஜான் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தில் வசித்து வந்தார். தவிர, நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

இன்று (மார்ச் 19) வழக்கு ஒன்றுக்காக சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து இடுவதற்கு ஜான் வந்துள்ளார். உடன் அவரது மனைவி சரண்யாவும் வந்துள்ளார். காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு இருவரும் காரில் திருப்பூர் சென்றுள்ளனர். ஈரோடு நசியனூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு கார் ஜான் கார் மீது மோதி நிறுத்தியுள்ளனர். பின், காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் ஜானை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர்.

இதனை தடுக்க முயன்ற ஜான் மனைவி சரண்யாவுக்கும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சித்தோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சேலம்-கோவை பைபாஸ் சாலையில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in