

செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ளவர்களில், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான வெளிநாட்டு பெண் கைதிகளும் அடக்கம்.
இந்நிலையில் புழல் மத்திய சிறையின் பெண்கள் பிரிவில் நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதிக்கும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த என்ற கைதிக்கும் இடையே ஏற்பட்ட வீண் வாக்குவாதம், கைகலப்பாக உருமாறியது. இதில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கைதி காயமடைந்தார்.
இதனை கண்ட சிறை பெண் காவலர்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து காயமடைந்த தென்னாப்பிரிக்கா பெண் கைதியை சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீஸார் நைஜீரிய பெண் கைதி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.