கோட்டூர்புரத்தில் ரவுடி நண்பருடன் கொலை: அண்ணன் என நினைத்து வேறு ஒருவரை கொலை செய்த கும்பல்

அருண், சுரேஷ்
அருண், சுரேஷ்
Updated on
1 min read

சென்னை: கோட்டூர்புரத்தில் ரவுடி அவரது நண்பருடன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் ‘யு’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (25). ரவுடியான இவர் மீது 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய காதலி சாயின்ஷா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கேளம்பாக்கம் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கோட்டூர்புரம் சித்ரா நகர் ‘வி’ பிளாக் பகுதியை சேர்ந்த சுக்கு காபி சுரேஷ் என்கிற சுரேஷ்(25) கைது செய்யப்பட்டார். சுக்குகாபி சுரேஷ் மீதும் 17 குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

காதலியை கொலை செய்த சுரேஷை தீர்த்துக்கட்டுவதற்கு சரியான தருணத்துக்காக அருண் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவருடைய அண்ணன் அர்ஜுனன் திட்டத்தை வகுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அருணும், அர்ஜுனனும் தனக்கு நாள் குறித்துள்ள தகவல் சுக்கு காபி சுரேசுக்கு கிடைத்துள்ளது.

எனவே, தாம் முந்திக் கொண்டு அவர்களை கொலை செய்ய சுக்கு காபி சுரேஷ் திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு கோட்டூர்புரம் சித்ரா நகர், நாகவல்லி அம்மன் கோயில் முன்பு அருணும், அவருடைய சகோதரர் அர்ஜுனனும் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருப்பதாக சுரேசுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சுக்கு காபி சுரேஷ் கூட்டாளிகள் 7 பேருடன் சென்று தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார்.

தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு ஒருவர் இறந்து கிடக்க மற்றொருவரான அருண் உயிருக்குப் போராடினார். இதையடுத்து, அவரை போலீஸார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

அப்போதுதான் அருணுடன் கொலை செய்யப்பட்டவர் அவரது அண்ணன் அர்ஜுனன் இல்லை; நண்பர் படப்பை சுரேஷ் என்பது தெரிந்தது. சம்பவத்தன்று அருண் தனது நண்பரான படப்பை சுரேஷுடன் மதுபோதையில் படுத்து தூங்கியுள்ளார். இது தெரியாமல் சுக்குகாபி சுரேஷ், அருணின் அண்ணனை கொலை செய்வதற்கு பதிலாக தவறுதலாக, நண்பரான படப்பை சுரேஷை தீர்த்துக் கட்டியுள்ளனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 7 பேரை கைது செய்து கோட்டூர்புரம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in