ஜன்னல் கம்பிகளை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி @ அருப்புக்கோட்டை 

ஜன்னல் கம்பிகளை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி @ அருப்புக்கோட்டை 
Updated on
1 min read

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஜன்னல் கம்பிகளை அறுத்து தமிழ்நாடு கிராம வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கி அலாரம் ஒலித்ததால் கொள்ளையடிக்க வந்தவர்கள் தப்பியோடினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏராளமானோர் தங்க நகைகளையும் அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்த வங்கியின் பக்கவாட்டில் உள்ள சந்தில் நுழைந்த மர்ம நபர்கள், ஜன்னலில் 3 கம்பிகளை மட்டும் அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வங்கியின் உள்ளே நுழைந்து கேமரா வயர் இணைப்பை துண்டிக்க முயன்ற போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி தடயங்களை சேர்த்தனர்.

மேலும், இந்த வங்கியில் ஏற்கனவே இதேபோல 2 முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கி அலாரம் ஒலித்ததால் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் தப்பியது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in