

சென்னை: ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களில் இருவரின் கால்கள் முறிந்தது.
சென்னை நீலாங்கரை வெட்டுவாங்கேணி கற்பக விநாயக நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜா(41). இவர், கடந்த 14-ம் தேதி இரவு மகன் ஹரிஷ்ராஜ் உடன் தேனாம்பேட்டை, பாரதியார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கும்பல் ராஜாவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து கொலை தொடர்பாக தேனாம்பேட்டை பருவா நகர் மணிகண்டன் என்ற வாண்டுமணி(30), அதே பகுதி விஜய் என்ற ஊறுகாய் விஜய்(37), கல்லுக்குட்டை செம்பொன் நகர் ராகுல் என்ற வெள்ளை ராகுல்(31), நந்தனம் சத்திய மூர்த்தி நகர் விக்னேஷ் என்ற விக்கி(31) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கான காரணம்: கைது செய்யப்பட்ட விஜய், தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் தர்பூசணி கடை நடத்தி வந்துள்ளார். அண்மையில் அங்கு சென்ற ராஜா, விஜயிடம் ஏன் இங்கு கடை போட்டுள்ளாய் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், வேதனை அடைந்த விஜய் தனது நண்பர் மணிகண்டனிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். இந்த முன்விரோதத்தில் விஜய் தனது கூட்டாளிகள் மேலும் 3 பேருடன் சென்று ராஜாவை கொலை செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஒருவரான மணிகண்டன் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குறறவாளி பட்டியலில் உள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட சுமார் 18 குற்ற வழக்குகள் உள்ளது. இதேபோல், ராகுல் மீது 4 குற்ற வழக்குகளும், மற்றொருவரான விக்னேஷ் மீது 2 குற்ற வழக்குகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக மணிகண்டன் என்ற வாண்டு மணி, ராகுல் ஆகியோரின் கால்கள் முறிந்திருந்தது. இவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களது கால்கள் முறிந்தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.