

நிலத்தின் சந்தை மதிப்பை குறைக்க லஞ்சம் வாங்கியதாக கைதான முத்திரைத் தீர்வை டிஆர்ஓ மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை போரூர் சபரி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு, தனது மனைவி பகுத்தறிவு பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம் பனங்காட்டூர் கிராமத் தில் ரூ. 20.46 லட்சம் மதிப்பில் 66 சென்ட் விவசாய நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை செங்கல்பட்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2013- 14 காலகட்டத்தில் இந்த நிலத்தின் சரியான சந்தை மதிப்புக்கு ஏற்ப, முத்திரை தீர்வை கட்டணத்தை நிர்ணயம் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்திரைத் தீர்வை டிஆர்ஓ-வாக பணிபுரிந்த மோகனசுந்தரத்திடம் (58) ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
விவசாய நிலத்துக்கான சந்தை மதிப்பை சதுர அடிக்கு ரூ.400-ல் இருந்து ரூ.230-ஆக குறைக்க தனக்கு ரூ.75 ஆயிரத்தை லஞ்சமாக வழங்க வேண்டும் என மோகன சுந்தரம் கேட்டதாக தெரி்கிறது. பின்னர் ரூ.60 ஆயிரம் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திர பாபு லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்துள்ளார். அதன்படி கடந்த 2014 ஜூலை 17 அன்று லஞ்சம் வாங்கியதாக மோகன சுந்தரம் மற்றும் அவரது உதவியாளர் ரேவதியை போலீஸார் கைது செய்தனர்.
அதையடுத்து மோகன சுந்தரம் ஜூலை 19 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பிரியா முன்பாக நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜராகி லஞ்சம் வாங்குவதற்கு ஏதுவாக ரேவதியை மோகன சுந்தரமே உரிய அனுமதியின்றி ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளார் என்றார்.
அதையடுத்து நீதிபதி, லஞ்சம் வாங்கியதாக முத்திரை தீர்வை டிஆர்ஓ-வாக பணிபுரிந்த மோகன சுந்தரம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டுள்ளன. எனவே அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மோகன சுந்தரம் லஞ்சம் வாங்க உதவியாக இருந்த ரேவதிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேபோல இந்த வழக்கின் புகார்தாரரான சந்திரபாபு, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காப்பாற்றும் நோக்கில் முரண்பாடான பொய் சாட்சியம் அளித்துள்ளார். எனவே அவர் மீதும் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.