

சென்னை: குத்தகை பணத்தை திரும்ப செலுத்தாமல் பண மோசடியில் ஈடுபட்டதாக வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வீரேந்திர ஆனந்தகுமார் (56). இவருக்கு சொந்தமான குடியிருப்புகளில் ஒன்றை ஜார்ஜ் (40) என்பவருக்கு ரூ.23 லட்சத்துக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். 2023-ல் குத்தகை ஒப்பந்தம் நிறைவடைந்தது. இதையடுத்து, ஜார்ஜ் வீட்டை காலி செய்வதாக உரிமையாளரிடம் முறையாக தெரிவித்தார்.
ஆனால், வீரேந்திர ஆனந்தகுமார் பெற்ற குத்ததை பணத்தை திரும்ப செலுத்தாமல் தொடர்ந்து இழுத்தடித்துள்ளார். பலமுறை முயன்றும் பணத்தை திரும்ப பெற முடியவில்லையாம். இதனால், விரக்தி அடைந்த ஜார்ஜ், இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வீரேந்திர ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
வங்கியில் அடமானம்: விசாரணையில் வீரேந்திர ஆனந்தகுமார் 2021-ம் ஆண்டு, அவரது குடியிருப்பை ஜார்ஜ்க்கு ரூ.23 லட்சத்துக்கு குத்தகைக்கு விட்டிருந்ததும், ஆனால் அந்த குடியிருப்பை ஏற்கெனவே வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று, பணத்தை திரும்ப செலுத்தாத நிலையில் வங்கியிலிருந்து ஜப்தி செய்யப்பட உள்ளதும் தெரியவந்தது. இதனாலேயே அவர் குத்தகை பணத்தை திரும்ப செலுத்தாமல் இழுத்தடித்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.